Friday 23 March 2012

THE SIDDHAR IDAIKAADAR AND THE PLANETS

இடைக்காடர் சித்தரும் நவக்கிரகங்களும்

இந்த உலகில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கும் மனிதனின் விதிக்கும் கிரகங்கள்தாம் காரணம் என்று இந்து மக்கள் நினைக்கிறார்கள். நம்புகிறார்கள். ஆனால் அப்படியும் சொல்லிவிடமுடியாது. அவை indicators. ஆனால் சற்று கூடுதலான ஆற்றல்கள் பெற்ற indicators. சுட்டிகள் அல்லது சுட்டிக் காட்டிகள்.


நம்முடைய வினைகள் - கர்மாக்கள் ஆகிய பிராரத்தம் சஞ்சிதம் ஆகாமியம் ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் பலன் அமையும். அந்தப் பலனைச் சுட்டிக்காட்டும் வண்ணம் அவை நின்றுகாட்டும்.


பரிகாரங்கள் செய்வதால் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மாற்றங்களைச் செய்யலாம்.


இரண்டு மூன்று கதைகள் இருக்கின்றன. உங்களின் பொருட்டு சொல்கிறேன்.


இடைக்காடர் என்றொரு சித்தர். அவர் ஜோதிடத்திலும் வல்லவர்.
அவருடைய கணிப்பின்மூலம் பன்னிரண்டாண்டுகள் பஞ்சம் ஏற்படும் என்று கண்டறிந்தார். ஆகவே பால் கொடுக்கும் எருமையொன்றை வைத்துக் கொண்டார். வரகரிசி என்னும் தானியத்தை மாட்டுச்
சாணத்துடன் சேர்த்து, ஆயிரக்கணக்கில் எரு வரட்டி தட்டி, காயவைத்துக்கொண்டார்.
வரகு வைக்கோலையும் வைத்து பிரம்மாண்டமான கூடமொன்றைத் தயாரித்துக்கொண்டார். ஒரு முருங்கை மரத்தையும் வைத்துக்கொண்டார்.


பஞ்சம் வந்தது.
எருமைக்கு வரகு வைக்கோலைப் போட்டார். அது எருமையாதலால் உண்டது. எரு வரட்டியில் உள்ள வரகரிசியை உதிர்த்து அதனைத் தாம் உண்டார். எருமையின் பாலை அருந்திவந்தார். அது தொடர்ந்து பால் கொடுக்கும் வகையில் அதற்கு ஏற்ற மூலிகைகள் - காயவைத்துப் பக்குவம் செய்யப்பட்ட மூலிகைகளைக் கொடுத்துவந்தார்.
முருங்கைக் கீரையையும் பக்குவப்படுத்தி உண்டுவந்தார். முருங்கை மரத்துக்கு எருமையின் சாணமும் கழிவு நீரும் கிடைத்து வந்தன.
ஹாயாக வரகு வைக்கோல் பரணுக்குக்கீழே படுத்துக்கொண்டார்.
இப்படியே சில மாதங்கள் கழிந்தன.


விண்ணில் உள்ள கிரகங்கள் கீழே பார்த்தன.


எங்கும் பஞ்சம்.


ஆனால் இடைக்காடரின் பர்ணசாலையில்மட்டும் வளம் விளங்கியது.


கிரகங்களுக்கு ஆச்சச்சரியம். ஆம். ஆச்சச்சரியம்தான். ஆச்சர்யம் அளவு கடக்கும்போது அது ஆச்சச்சர்யம் ஆகும்.
தில்மூலநாயனாரின் சரடேஸ்வர தீபிகையில் 420-ஆம் சூத்திரத்தில் இதன் இலக்கணத்தைக் காணலாம்.


"யென்னடாயிது...? இந்தப் பாண்டிநாட்டுக்கு வந்த விசித்திரம்! எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள்; பசியோடு இருக்கிறார்கள். இவன் ஒருவன் மட்டும் பசியாமலிருப்பது நமக்கென்ன லேபமா? வாருங்கள்... போய்ப் பார்ப்போம். இந்த இடைக்காடனின் கொட்டத்தை யடக்க ஒரு திட்டத்தைப் போடுவோம்", என்று கட்டபொம்மன் படத்தில் மேஜர் பானர்மேன் ஜாவர் சீதாராமன் போல் பேசிக்கொண்டு வந்தார்கள்.


இறங்கிவந்தார்கள்.


"ஆ...ர்ஹ்ஹ்ஹ்ஹ்......யிந்த வரகு வைக்கோல் கோட்டையை வைத்துக்கொண்டா மனக்கோட்டையைக் கட்டினான். யிப்போதே ராகு கேதுவை வைத்து ஒரு வழிபண்ணுகிறோம் பார்!"


இடைக்காடர் அவர்களை வரவேற்றார். அவர்களுக்குரிய மந்திரங்களில் வசிய, சம்மோஹணப் பிரயோகங்களை இணைத்து உச்சாரணை செய்து, அவர்களுக்கு எருமைப் பாலில் வரகரிசியைப் போட்டு கொதிக்கவைத்து சாப்பிடக் கொடுத்தார். அதனைச் சாப்பிட்ட கிரகங்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.


அப்போது பார்த்து, இடைக்காடர் மிக விரைவாக ஒரு பெரிய இராசிக் கட்டத்தை வரைந்து, அந்தக் கிரகங்களை, இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து எப்படி எங்கெங்கு இருப்பார்களோ அந்த மாதிரியாகக் கட்டங்களில் அடைத்துவைத்து விட்டார்.
அடுத்த வினாடி, மழைமேகங்கள் கூடி மழையைப் பெய்து, நீர் புரண்டு ஓடியது.
பஞ்சமும் நீங்கியது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

THE SURGEON AND YOGA-SIDDHI

சர்ஜனும் யோகாவும்

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவைப் பிடிக்க ஆரம்பித்த சமயத்திலிருந்தே மேல்நாட்டு மருத்துவம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.


கிழக்கிந்தியக் கம்பெனியில் மருத்துவர்கள் இருந்தார்கள். அத்துடன் படைப் பிரிவுகளிலும் Army Surgeons என்னும் பதவிகள் இருந்தன.


ஓரளவுக்கு நல்ல சம்பளமாகவும் இருந்திருக்கிறது.


அப்போதெல்லாம் பல போர்களும் சண்டைகளும் நடந்துகொண்டேயிருந்தன. பிரிட்டிஷ் பட்டாளம் கண்ட கண்ட இடங்களுக்கெல்லாம் செல்ல வேண்டியிருந்தது.


இந்தியாவில் அலோப்பதி மருத்துவத்தின் ஆர்ம்பகாலத்தைப் பற்றி நான் ஒரு சிறிய ஆராய்ச்சி செய்ததில் ஒரு விசித்திரமான சர்ஜன் பற்றி தெரியவந்தது.


சர்ஜன் ரெஜினால்ட் என்பது அவருடைய பெயர்.


தாம் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் இந்தியர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக தக்க துணையுடன் வெளியில் சென்று உலாவுவார்.


அப்போது சில யோகியர் நெருப்புமேல் நடப்பது, ஆணிப்படுக்கையில் படுப்பது, மூச்சை அடக்குவது, இதயத்தை நிறுத்துவது போன்றவற்றையெல்லாம் செய்வதைப் பார்த்திருக்கிறார்.


இதைக் கேம்ப்புக்கு வந்து அவர்களுடைய Lounge Pub-இல் சொல்லியிருக்கிறார்.


அதற்கு அவர்கள், "இதெல்லாம் சும்மா கப்ஸா என்பதை நீயும் அறிவாய். நாங்களும் அறிவோம். இதையெல்லாம் நீ நம்புகிறாயா?" என்றார்கள்.
அவர் சொன்னார்: "இல்லை. நானும் நம்பவில்லை. ஆனால் என் கண்களால் நேரில் பார்த்தேன்".


அவர் மற்றவர்கள் போலல்லாமல் ஓய்வு நேரமிருக்கும்போதெல்லாம் யோகியரைத் தேடிச் செல்வார்.


ஒருநாள் பக்கத்து கிராமத்தில் ஒரு யோகியார் தன்னுடைய உயிரை விடப்போகிறார் என்பதை அறிந்து அங்கு சென்றார்.


யோகியார் ஒரு மரத்தடி மேடையின்மீது அமர்ந்துகொண்டார்.
அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நேரத்தில் அவர் மூச்சு விடுவதையும் நிறுத்தினார். அவருடைய இதயமும் நின்றது.


அவர் உடற்கூட்டுக்குள் ஒருவரும் இல்லை.


இது ரெஜினால்டுக்கு ஒரு திருப்புமுனையாகப் போயிற்று


யோகியரைத் தேடித்தேடி அங்கும் இங்கும் செல்லலானார், ரெஜினால்ட். அவர்களுடன் பழகுவார்.
திரும்பிவந்து Army Mess-இல், தனியாக உட்கார்ந்துகொண்டு பைப்பை வாயில் கடித்தவாறு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார். நடுவில் அடிக்கடி, "ஹ்ம்ம்ம்...." என்று ஓசையெழுப்பியவாறு இருப்பார்.


அரசாங்கம் அவருக்கு ஆறுமாததுக்குக் கட்டாய விடுமுறை கொடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தது.
"தாமாகப் பேசிக்கொண்டிருப்பது. நாம் சொல்வதைக் காதில் வாங்காமல் வெறித்த பார்வையோடு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பது.... இப்படியெல்லாம். ஆறுமாதம் இங்கிலாந்தில் இருந்துவிட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும்", என்று மற்றவர்களிடம் அவருடைய கமாண்டர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.


யோகியரைப் பற்றிய சர்ஜன் ரெஜினால்டின் ஆராய்ச்சிதான் அந்தத் துறையில் மேற்கத்தியாரின் அறிவியல்பூர்வமான முதல் ஆராய்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$