Tuesday 20 December 2011

HIDE, HIDING, HIDDEN, GONE

காணோமே..... காணோமே -#1

        கடந்த சில ஆண்டுகளாக டிஸ்கவரி சேனலில் 'புராதன நாகரிகங்கள் நமக்குக் கொடுத்தவை' என்ற தலைப்பிலும் அதேபோன்ற வேறு சில தலைப்புகளிலும் பல விஷயங்களைக் காட்டி வருகின்றனர். 
குறிப்பாக சீனர்கள் மூவாயிரம்/ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செய்த கண்டுபிடிப்புகளை ரொம்பவும் விலாவாரியாகக் காட்டுகிறார்கள்.
நூல்களில் கண்ட குறிப்புகள், அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த எச்சங்கள் முதலியவற்றை வைத்து பல பழம்பொருட்களை மீட்பு செய்திருக்கிறார்கள். 'புனர்சிருஷ்டி' என்று எழுத நினைத்தேன். ஆனால் இணையத்தில் உள்ள கிரந்த எதிர்ப்பாளர்கள் 'தமிழ்த் துரோகி' என்பார்கள் என்று விட்டுவிட்டேன். 
தமிழர்கள் சம்பந்தப்பட்டவை இதுவரை மிகவும் குறைவே. ஒரு கையில் உள்ள விரல்களால் எண்ணிவிடமுடியும். 
போகர் ஏழாயிரம், அகத்தியர் பன்னீராயிரம் போன்ற நூல்களில் எவ்வளவோ விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. Leibnitz Equation என்பது கடந்த அறுபது ஆண்டுகளில்தான் கொஞ்சம் பிரபலமாகியது. ஆனால் அதெல்லாம் பல காலத்துக்கு முன்னரே நம்ம ஆட்களுக்குத் தெரிந்திருந்தது.
ஆனால் நம்ம விஷயங்களை ஆராய்ந்து அக்காலத்தில் காற்றில் எழும்பும் பலூனை எப்படிச் செய்தார்கள் போன்ற விபரங்களைச் செய்து பார்க்கலாம் அல்லவா?
Weaponology, Martial Arts போன்றவற்றில் உள்ள ஆயுதங்களின் பிரயோகங்களைக்கூட நவீன சாதனங்களின் ("தமிழ்த்துரோகி!...... ஏன்..., 'தற்காலக் கருவிகள்' என்று எழுதுவதுதானே!) மூலமாக தீர்க்கமாக ஆராய்ந்து செய்து காட்டியும் இருக்கிறார்கள். 
அவர்களிடம் உள்ள வர்ம நூல் நன்கு ஆராயப்பட்டுவிட்டது. 
நம்ம வர்மக் கலை நூல் யாருக்குமே தெரியப்படாமல் மறைந்து கிடக்கிறது. 
அதன் பெயரும் ஒன்றிரண்டு விஷயங்களும் சிலருக்கு மேல் எழுந்த வாரியாகத் தெரியலாம்.
'இந்திய'னில் கமலஹாஸனும் 'கில்லி'யில் பிரகாஷ்ராஜும் காட்ட வில்லை யென்றால் அதுவும் தெரிந்திருக்காது.
இன்னும் எழுதவேண்டியிருக்கிறது.....

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


THE SEARCH

தேடல்

        இரண்டு கதைகளை இங்கே போட்டிருக்கிறேன். 
முதல் கதை சீனாவில் வழங்கும் கதை. அங்கு நிலவிய தாஓஇஸம் என்னும் சமயத்தில் காணப் படுவது.
இரண்டாவது கதை இந்தியக் கதை. உபநிஷதத்தில் காணப்படும்.

முதல் கதையைப் படித்துவிட்டு, அடுத்த கதையை அடுத்தாற்போல் உடனே படித்து விடுங்கள்.
ஒற்றுமை தெரியும்.


முதற்கதை -


Taoism என்றொரு சமயம் இருக்கிறது. சீனாவில். லாவோட்ஸ என்பவரால் தோற்றுவிக்கப் பட்டது என்பார்கள். மிகவும் பழமையான சமயம். 

தாஓயியர்களிடையே வழங்கும் ஒரு கதை. 
இதை ஏற்கனவே அகத்தியத்தில் போட்டு, இறுதியில் ஒரு கேள்வியையும் கேட்டிருந்தேன். 
யாருமே இன்றுவரை பதில் சொல்லவில்லை.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


ஒரு சன்னியாசி காட்டில் ஒரு கல்லைக் கண்டெடுத்தார். 
அதை அவருடைய தொங்கு மூட்டையில் வைத்துக்கொண்டு வந்தார். ஓர் ஊரை ஒட்டிய பெரிய மரத்தடியில் இருந்த கல்மேடையில் தம்முடைய மூட்டையை வைத்துக்கொண்டு படுத்திருந்தார். 


அப்போது ஒருவன் வேகமாக ஓடிவந்தான். 


அவன் அந்த சன்னியாசியைக் குலுக்கி எழுப்பி, "எங்கே அந்தக் கல்? அந்த அரிய கல் எங்கே? அதை கொடு" என்றான்.
"என்ன கல்?" என்று சன்னியாசி கேட்டார். 
நேற்று இரவு நிதிக் கடவுள் என் கனவில் வந்தார். அவர் " இந்த ஊருக்கு வெளியில் தங்கியிருக்கும் சன்னியாசியிடம் ஒரு கல் இருக்கும். அது உன்னை மிகப் பெரிய செல்வந்தனாக ஆக்கும்", என்று என்னிடம் சொன்னார், 

    சன்னியாசி தம்முடைய மூட்டைக்குள் குடைந்து அந்தக் கல்லை எடுத்தார். 


"நான் இந்தக் கல்லைத்தான் காட்டில் கண்டெடுத்தேன். விசித்திரமான கல். ஆகவே கையில் எடுத்துக்கொண்டு வந்தேன். இந்தா. உனக்கு வேண்டுமென்றால் எடுத்துக்கொள்," என்று சொல்லிவிட்டு அந்தக் கல்லை அவனிடம் கொடுத்துவிட்டு, கொட்டாவி விட்டுக்கொண்டே மீண்டும் மூட்டையைத் தலைக்கு வைத்துக்கொண்டு படுத்து, மறுபுறம் திரும்பிக் கொண்டு முழங்கால்களை மடக்கிக்கொண்டு, நிம்மதியாகத் தூங்கலானார். 


அந்த மனிதன் தன் கையிலிருந்த கல்லை மிகவும் வியப்புடன் பார்த்தான். 

அவனுடைய உள்ளங்கையை நிரப்பிக்கொண்டு அந்தக் கல் இருந்தது. 
உலகிலேயே மிகப் பெரிய வைரக்கல்!


வீட்டுக்குத் திரும்பினான். 
தூக்கமே வரவில்லை.
இப்படியும் அப்படியுமாகப் புரண்டுகொண்டேயிருந்தான். ஒரே குழப்பம். சிந்தனை. 
        
விடிந்தவுடன் வேகமாக அந்த மரத்தடிக்குச் சென்றான். சன்னியாசி இன்னும் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார். 


அவரைக் குலுக்கி எழுப்பிச் சொன்னான், 


  "இந்த மகத்தான விலை மதிப்பில்லாத உயர்ந்த வைரத்தை, கூழாங்கல்லை எறிவதுபோல சர்வசாதாரணமாக எறியச் செய்த மிகப்பெரும் அரிய செல்வம் எதையோ நீ வைத்திருக்கிறாய். 
அதை எனக்குத் தா!"
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


இந்தக் கதையைப் போல பிருஹதாரண்யக உபநிஷதத்தில் ஒரு சம்பவத்தைக் காணலாம். 


யக்ஞவல்கியர் என்னும் ரிஷிக்குக் காத்யாயனி என்பவர் மனைவி. இவர் சாதாரணமான பெண்களுக்கு உரிய கடமைகளை மேற்கொண்டு குடும்பத்தை நடத்தினார். 
மைத்ரேயி என்ற இளம்பெண் ஒருநாள் காத்யாயனியிடம் வந்தார்.
யக்ஞவல்கியரோடு உடன் இருந்து ஞானத்தைக் கற்றுக்கொள்ள அனுமதி கேட்டார். 
காத்யாயனியின் அனுமதியின் பேரில் யக்ஞவல்கியருடைய மாணவியாகவும் மனைவியாகவும் உடன் இருந்தார் மைத்ரேயி.
சில காலம் கழித்து யக்ஞவல்கியர் தம் மனைவியரை அழைத்து, தாம் பூரண துறவறம் பூண வேண்டியிருப்பதால் குடும்பத்தை விட்டு விட்டுப் போகப்போவதாகக் கூறினார். 
அதற்கு முன்னதாக தம்முடைய பசுக்கள், சொத்துக்கள் ஆகியவற்றை மனைவியரிடம் கொடுத்தார். 
காத்யாயனியின் பங்குக்குக் கிடைத்தவற்றை அவர் வாங்கிக்கொண்டார்.


ஆனால் மைத்ரேயி அவ்வாறு செய்யவில்லை. 
யக்ஞவல்கியரைக் கேட்டார்.
"ரிஷிகளில் எவ்வளவோ செல்வம் படைத்தவர் நீவிர். இவ்வளவையும் க்ஷணப்பொழுதில் உதறித் தள்ளிவிட்டுப் போகிறீர். அப்படியானால் இவையெல்லாவற்றையும் விட மிகப் பெரிய அரிதான விஷயம் இருக்கிறது. சொல்லுங்கள். உலகில் பரப்பிவைக்கப்பட்ட அனைத்து செல்வங்களும் இறவாத்தன்மையை நல்குமா?" 
யக்ஞவல்கியர், "அவை கொடுக்கமாட்டா. நீ அதிக செல்வம் படைத்தவளாக இருப்பாய். அவ்வளவுதான். அவை அனைத்துமே உனக்கு இறவாத்தன்மையைக் கொடுக்கமாட்டா", என்றார். 
"அப்படியானால் நீவிர் இவற்றையெல்லாம் துச்சமாக மதித்து, விட்டு விட்டு எதை நாடிப்போகிறீரோ, அதை எனக்குக் கொடும்", என்று பிடிவாதமாச் சொல்லிவிட்டு, அவருடன் புறப்பட்டார். 
பின்னர் யக்ஞவல்கியர் மைத்ரேயியிடம் "நீ எப்போதுமே என் அன்புக்கு உரியவள். இப்போது இந்தக் கேள்வியால் இன்னும் எனக்குப் பிரியமானவள் ஆகிவிட்டாய். வா..., இப்படி அமர். நான் உனக்கு அதைச் சொல்கிறேன். அதை நீ கேட்டுக்கொண்டவுடன் அதை நீ தியானம் செய்", என்றார்
பிறகு பிரம்ம ஞானத்தை மைத்ரேயிக்கு யக்ஞவல்கியர் உபதேசம் செய்தார்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$