Wednesday 14 September 2011

UNWANTED SECRET

வேண்டப்படாத ரகசியம்


         சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது........
         மலேசியாவின் முக்கிய முருகன் தலங்களில் ஒன்றாக உள்ளத கோலாலும்ப்பூரின் பத்து மலை - Batu caves. 
'Batu என்றால் மலாய் மொழியில் 'பாறை' அல்லது 'கல்'. அது ஒரு பெரிய சுண்ணாம்புப் பாறை- limestone; அதுதான் குன்றாக நிற்கிறது.
பன்னெடுங்காலமாக அந்த குன்றின்மீது விழும் மழை, படியும் பனி ஆகியவை எப்போது வடிந்துகொண்டேயிருக்கும்.
அதன் காரணத்தால் பெரும் பெரும் துளைகள், துவாரங்கள், குகைகள், குடம்புகள், stallagmites, stallagtites ஆகியவற்றைக் காணலாம். 
18-ஆம் நூற்றாண்டில் அந்தக் குன்றில் உள்ள பெரிய குகையொன்றில் முருகனை வழிபடலாயினர். 
அந்த வழிபாடு நாளடைவில் மிகச்சிறப்புப் பெற்றுவிட்டது. இப்போது தைப்பூசத்தின்போது பத்து லட்சத்துக்கு மேல் மக்கள் கூடும் விழா அங்கே நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பால்குடங்களும் காவடிகளும் அங்கு எடுக்கப்படுகின்றன.
சாதாரண நாட்களிலும்கூட அது ஒரு முக்கியமான பயணிகள் கேந்திரமாக விளங்குகிறது. 
அன்று ஒரு விசேடமான நாள். அதிலும் ஒரு குறிப்பிட்ட நேரம் அதி முக்கியமானது. 
ஆகவே அங்கு சென்றிருந்தேன்.
அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே அங்கு சென்றுவிட்டோம். 
தாகசாந்தி செய்துகொள்ளலாம் என்று அங்கிருந்த ஹோட்டலில் தேநீர் அருந்தச் சென்றோம். அங்கு, பக்கத்து மேசையில் நான்கு பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது சில தமிழ்ப்பாட்டுக்களைச் சொல்லி ரசித்துக்கொண்டிருந்தனர். 
அங்கிருந்து வரும்பொது அந்த பெண்களிடம் அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லிவிட்டு வந்தேன். அவர்கள் நிமிர்ந்து பார்த்துவிட்டு, "அப்படியா?" என்றார்கள்.

அதன் பிறகு நாங்கள் குகைக்குச் சென்றோம்.
அங்கு திரிந்த  தமிழர்களிடம் சொன்னால் எடுபடாது என்ற அச்சம். எடுபடக்கூடிய தமிழர்களாக அங்குள்ளவர்கள் தோன்றவில்லை. 
ஆகவே அங்கிருந்த இரண்டு வெள்ளைக்காரப் பெண்மணிகளிடம் சொன்னேன். 
முதல் பெண், நான் சொல்லச்சொல்ல நகர்ந்து பின்பக்கமாகப் போனாள். அடுத்தவள் பிரிட்டிஷ்காரி. கொஞ்சம் ஆர்வம் காட்டினாள். இன்னொரு ஜப்பானிய இளைஞனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டான்.

அதன்பின்னர் அங்கிருந்து திரும்பி வரும்போது, ஒரு கறுப்புப்பையைத் தோளில் தொங்கப்போட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சிறிய சிறிய பிளாஸ்ட்டிக் பைகளில் இருந்த ஏதோ பொருள்களை வருகிறவர் போகிறவர்களிடம் விற்றுக்கொண்டிருந்தான். 

கோயில் வாசலில் ஒரு நரிக்குறவன். அவன் வியாபார மும்முரத்தில் இருந்தான். செத்த நரியின்றின் மண்டைத்தோலை உரித்து விலக்கி, அதன் மண்டையோட்டில் நீட்டிக்கொண்டிருந்த முட்களைக் காட்டி, நரிக்கொம்புகளை விற்றுக்கொண்டிருந்தான்.

அங்கிருந்து வரும்போது, கைரேகை ஜோதிடம் சொல்வதாக ஒருவர் அந்தப் பக்கத்தில் ஒரு ஸ்டாலில் ஒரு மேசையைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். அவரிடம் கையை நீட்டிய ஓர் ஆளின் உள்ளங்கையைப் பார்த்துவிட்டு, அதனை இன்னும் நன்றாகப் பார்க்கவேண்டும் என்பதற்காக ஒரு பூதக்கண்ணாடியைத் தன்னுடைய கறுப்புத் தொங்கு பையிலிருந்து எடுத்தார்.
அவரின் இடத்தைத் தாண்டி நாங்கள் இளநீர் அருந்த ஸ்டாலுக்குச் சென்றோம். சற்று நேரத்தில் அந்த நரிக்குறவன் தோளில் ஒரு கறுப்புப்பையைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வியாபாரம் முடிந்து சென்றுகொண்டிருந்தான். 

எனக்கு மனதில் ஓர் அடி. 'என்னடாது. எவ்வளவு பெரிய விஷயத்தை இவர்களிடம் சொல்கிறோம். சற்றும் எடுபடவேயில்லையே?'

மனத்தாங்கலுடன் காரில் ஏறினேன்.
ஏறுமுன் என் தோளில் தொங்கிக்கொண்டிருந்த பையை - கறுப்புபையை - பின்ஸீட்டில் போட்டேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$