Thursday 14 April 2011

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - Part 6

திருமலை நாயக்கரால் சித்திரை மாதவசந்த விழா, பெரும் பரிமாணங்களைப் பெற்றது. தைமாதத்தின் மீனாட்சி திருக்கல்யாணம், மாசி மாதத்தின் "நாயக்கர் செங்கோல் வாங்கும் வைபவம்", மாசித் தேரோட்டம், பங்குனித் தேரோட்டம், ஆகியவைகளைத் தனக்குள் அடக்கிக்கொண்டு, கள்ளழகர் சித்திரா பௌர்ணமி உற்சவத்தையும் இழுத்து வைத்துக்கொண்டு, பெருவிழாவாக மாறியது.

சித்திரத் திருவிழா பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படுவதாயிற்று.  இன்றும்தான். இந்தத் திருவிழாவின்போது மீனாட்சி பட்டாபிஷேகம் அம்மன் சன்னிதியின் ஆறுகால் பீடத்தில் நடைபெறும். அப்போது நாயக்கர், அம்மனிடம் செங்கோல் வாங்கும் விழாவும் நடைபெறும். திருமலை நாயக்கர் அந்த விழாவை ஏற்படுத்திய காலத்தில் அது மிகப் பெரிய அளவில் நடந்தது.  இதைப் பற்றி "ஸ்ரீதளப் புஸ்தகம்" என்னும் பழைய ஆவணச்சுவடியில் விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள். பழைய காலத் தமிழ்நடை. அதனைச் சுருக்கி எழுதியுள்ளேன்.

மதுரை நாட்டின் எழுபத்திரண்டு பாளையக்காரர்கள் -  கட்டபொம்மனைத் தவிர - அனைவரும் வந்திருப்பார்கள்.  ஒவ்வொருவரும் அவரவருக்குரிய பட்டாளம் பரிவாரம் புடைசூழ அவரவர் கொண்டுவந்த தாரை தப்பட்டை, பதினெட்டு வாத்தியங்கள் முழங்க, வரிசையாக திருமலைநாயக்கர் மஹாலிலிருந்து புறப்படுவார்கள்.  பின்னால் யானைமீது நாயக்கர் வருவார். இப்படி பயங்கரமாகக் கொட்டி முழக்கிக்கொண்டு எழுபத்திரண்டு செட்டுகளுடனும் நாயக்கர்  கோயிலுக்கு வந்து சேர்வார்.

அம்மன் சன்னிதியின் ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனை ரத்தின சிம்மாசனத்தில் எழுந்தருளுவித்திருப்பார்கள்.  நாயக்கர் கோயிலுக்குள் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்வார். சுவாமிக்குச் சாத்தியிருக்கும் மாலையை நாயக்கருக்கு சமர்ப்பிப்பார்கள்; பரிவட்டங்கள் கட்டுவார்கள். செங்கோலை எடுத்து நாயக்கர் கையில் கொடுப்பார்கள்.  அதை வாங்கிக்கொண்டு, நாயக்கர் மீண்டும் தன்னுடைய பெரும் பரிவாரங்களுடன் "பட்டணப்பிரவேசம்" என்ற ஊர்வலம் வருவார். அப்போது மீனாட்சி சுந்தரேசுவரருடன் கோயிலில் உள்ள 'இளைய பிள்ளையார்' எனப்படும் முருகனையும் ஊர்வலமாகக் கொண்டு வருவார்கள்.

சிவன் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்தியை 'சோமாஸ்கந்த மூர்த்தம்' என்று சொல்வார்கள். சிவனும் உமையும் அமர்ந்திருக்க இருவரின் நடுவிலும் சிறிதான உருவில் முருகனின் திருவுரு விளங்கும்.  'ச' = உடன்; ச + உமா + ஸ்கந்த = சோமாஸ்கந்தமூர்த்தி =  உமை கந்தனுடன் உள்ள மூர்த்தி.  இந்த மூர்த்தமே விழாக்களில் சம்பந்தப்படுவது. முருகனும் உடன் இருப்பது ஆகம மரபு.

அதுமட்டுமல்ல. மீனாட்சி திருக்கல்யாணத்தில் 'பவளக் கனிவாய்ப் பெருமாள்' என்னும் விஷ்ணுவும் விநாயகரும்கூட இருப்பார்கள்.  அடுத்து திருப்பரங்குன்றத்து முருகனின்சம்பந்தம்.....

No comments:

Post a Comment